உங்கள் வீட்டின் பக்கத்திலேயே வளரும் இந்த அற்புத மூலிகை பற்றி தெரியுமா?
தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு கீழாநெல்லி செடியை பயன்படுத்தி வந்தனர் என்பதை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.
ஆம், கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும்.
செடி முழுவதும் மருத்துவ பயன்பாடு கொண்ட கீழாநெல்லி, ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரம்.
வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும், இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
கீழாநெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம்.
கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
மருத்துவ பயன்கள்
மோரில் கறிவேப்பிலைப் பொடியையும் கீழாநெல்லிப் பொடியையும் கலந்து அருந்த, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்க, அரிசிக் கஞ்சியுடன் கீழாநெல்லியை அரைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கீழாநெல்லியோடு சீரகத்தைச் சேர்த்து தயிரில் அடித்து ‘லஸ்ஸி’ போல் பருக, வேனிற் காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், கண்ணெரிச்சலுக்கான தீர்வு கிடைக்கும்.
Getty Images
கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.
கீழாநெல்லி கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும்.
கீழாநெல்லி இலைகளோடு பாசிப்பயற்று மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கச் சரும நோய்கள் தலை காட்டாது.