கத்தரிக்காயில் சட்னி செய்யலாமா? கோயம்புத்தூர் பாணியில் இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்!
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் பெரும்பாலானவர்களின் தெரிவு தேங்காய் சட்னி, தக்காளிசட்னி தான்.ஆனால் ஆரோக்கியம் நிறைந்த கத்தரிக்காயிலும் அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் என உங்களுக்கு தெரியுமா?
கத்தரிக்காயை இப்படி சட்னி செய்து இட்லி, தோசையுடன் பரிமாறினால் எப்போதையும் விட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள்.இந்த சட்னியை எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 5
தக்காளி - 3
சிறிய உருளைக்கிழங்கு - 1
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், சிறு புளி துண்டு, ஆகியவற்றை ஒரு குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் 2 கப் நீரை சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கிக் ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியதும் குக்கரைத் திறந்து, அவற்றை ஒரு குழி பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மத்து கொண்டு நன்றாக மசித்துவிட வேண்டும்.
கடைசியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அசத்தல் சுவையில் கத்திரிக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |