முடி அடர்த்தியாக வளர வாரம் ஒருமுறை கருவேப்பிலை துவையல் சாப்பிடுங்க! செய்வது எளிது
நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருள் கருவேப்பிலை, மணத்திற்காகவும், உணவின் சுவைக்காகவும் பயன்படுத்தும் மருத்துவ மூலிகை என்றே குறிப்பிடலாம்.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.
தொப்பை குறைவது, முடி வளர்ச்சியை அதிகரிப்பது, உடலில் இரும்புசத்தை அதிகரிப்பது என பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த பதிவில் கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை– ஒரு கைப்பிடி
வர மிளகாய்- 2 (காரத்திற்கு ஏற்ப)
கடுகு, உளுத்தம் பருப்பு– ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு (தாளிக்க மட்டும்)
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை அலசி எடுத்துக் கொள்ளுங்கள், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகை வறுத்துக்கொள்ளவும்.
இதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும், அடுத்ததாக வரமிளகாய் சேர்த்து வதக்கவும், இதனுடன் கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்கவும்.
ஓரளவு பச்சை வாசனை போன பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல், புளி சேர்க்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும், கடைசியாக சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்தால் சத்தான கருவேப்பிலை துவையல் தயாராகிவிடும்!!!