கறி சுவையை மிஞ்சும் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு... எப்படி செய்வது?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை இரண்டு வகையில் காணப்படுகின்றது. ஒன்று வெள்ளை மற்றும் கருப்பு.
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
அத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பு கொண்டைக்கடலையை வைத்து கறி சுவையை மிஞ்சும் அளவுக்கு அட்டகாசமாக சுவையில் எவ்வாறு குழம்பு செய்யவாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை
சன்னா - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
பிரியாணி இலை - 1
தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
சீரகம் - 1/4 தே.கரண்டி
சோம்பு - 1/4தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
தக்காளி - 2 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் கருப்பு கொண்டைக்கடலையை கழுவி சுத்தம் செய்து பின்னர் சுடுநீரில் போட்டு 5 மணிநேரம் வரையில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை ஓர் குக்கரில்போட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயம், சீரகத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, எண்ணெய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி இலை மற்றும் கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஒருமுறை கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7முதல் 8 விசில்கள் வரும் வரையில் நன்றாக வேகவிட்டு குக்கரை இறக்கி ஆறவிட வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அரைத்த தக்காளியையும் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 3 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால், அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |