வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க
பொதுவாகவே இரும்புச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக கீரை காணப்படுகின்றது. கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான்.
நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.
ஆனால் பலருக்கு கீரை சாப்பிடுவது பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலான விடயமாக இருக்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கீரையை போட்டிப் போட்டுக்கொண்டு சாப்பிட வைக்கும் வகையில் அரைக்கீரை பொரியல் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 3
பூண்டு - 15 சிறிய பல்
அரைக்கீரை - 1 கட்டு
உப்பு - சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொறியவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போககும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் கொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.(கீரையை ஒருபோதும் மூடி வைத்து வேக வைக்கக்கூடாது அதனால் கீரையின் நிறம் மாறிவிடும்)
கீரை சற்று சுருங்கி பாதியளவு வெந்ததும், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, முழுமையாக வேகவிட வேண்டும்.
இறுதியாக துருவி வைத்துள்ள தேங்காயை தூவி கிளறி இறக்கினால், சுவையான அரைக்கீரை பொரியல் தயார். இந்த முறையில் கீரை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |