பலரும் வெறுத்து ஒதுக்கும் கருணைக்கிழங்கில் ருசியான பஜ்ஜி செய்யலாம் தெரியுமா?
சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்கும் கருணைக்கிழங்கு மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து உணவாக பயன்படுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் உள்ளன.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன.
பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.
உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. பெண்களின் வெள்ளைப்பாடு உபாதைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
உடல் வலி இருந்தால், குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.
இதைக்கொண்டு சுவையான பஜ்ஜி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கு - 250 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பஜ்ஜி ரெடி