மகனுக்கு மருந்து வாங்க 300 கி. மீ சைக்கிளிலேயே பயணம் செய்த தந்தை- நெகிழ வைத்த செயல்
நரம்பு பிரச்னையால் அவதிப்படும் மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக தந்தை 300 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிலேயே பயணம் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கொப்புலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆனந்த். இவருக்கு போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்தநிலையில் இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார்.
மைசூரூவில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.
இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும், ஒரு நாள்கூட தவறவிடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.
இதனிடையே, முழு முடக்கத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லமுடியாமல் தவித்தார் ஆனந்த். மேலும், இதனால் சைக்கிளில் செல்ல முடிவெடுத்த ஆனந்த், காவல்துறை கெடுபிடிக்கு பயந்து மக்கள் அதிகம் பயன்படுத்தாத கனகபுரா பாதை வழியாக 2 நாட்கள் பயணப்பட்டு பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றார்.
300 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்திருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர், அவரது மகனுக்கு தேவையான மாத்திரைகளையும், வழிச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பினர்.
அதை பெற்றுக்கொண்டு அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் 300 கிலோ மீட்டர் பயணித்து மகனுக்கு மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.