என் உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்.. நடிகர் கமலஹாசன் வெளியிட்ட வீடியோ!
நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தல் தோல்விக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்த கட்சியில் இருந்து விலகி இருந்தனர்.
மேலும், கட்சியில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால், கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.
அதில், தேர்தலில் தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே ஆகும். மாற்றங்கள் என்றும் மாறாமல் நடந்து கொண்டே இருக்கும்.
அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய், நாம் உள்ளவரையில் நம் கொடி , புத்தொளியுடன் பறந்து கொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலராய் நான் இருப்பேன்.
நான் ஒரு விதை தான். இந்த விதை வீழ்ந்தது வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி.... விதை வீழ்ந்தாலும் மண்ணை பற்றி விட்டால், விரைவில் அது காடாகும். நாளை நமதாகும்.
உயிரே, உறவே, தமிழே, ஊரடங்கினாலும்,வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அது உதாரணமாக நாம் ஆகிவிடக்கூடாது. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பிப்பது, நாம் இதுவரை கண்ட சரித்திரம்.
மக்களுக்கு முக அறிமுகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது.
திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழிசெய்தது அவர்களுக்கு பெரும் ஜனநாயகமாக தெரிந்தது, காலசூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அவர்களுக்கு தெரியாமல் போனது.
தோல்விக்குப்பின், அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமையை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாக படுகிறது. அது ஜனநாயகமே அல்ல.
நாடோடிகள், யாத்ரீகர் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் வியாபாரம் இருக்கும் வரை தங்குவார்கள், பிறகு வெளியேறுவார்கள். சிலர் எழுப்பும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும்
கட்சி உட்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள். என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்... அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” pic.twitter.com/RwAa9ykS71
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2021