ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் சட்னி... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லி, தோசையாகத்தான் இருக்கும். குறிப்பபாக தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
இட்லி தோசைக்கு சட்னி சாப்பிடுகிறவர்களை விட சட்னிக்காகவே சாப்பாட்டை சாப்பிடுகின்றவர்கள் அதிகம். அப்படி சட்னி பிரியர்களை குஷியாக்கும் அளவுக்கு அசத்தல் சுவையில் ஆந்திரா பாணியில் கடப்பா சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு எள் - 1மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)
பூண்டு - 6 பல்
தக்காளி - 2 (நன்றாக பழுத்தது)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
தேங்காய் - ½ மூடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானரவை
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ தே.கரண்டி
கடலை பருப்பு - ¼ தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - ¼ தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியான ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து பூண்டையும் தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் எள்ளு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் உரித்து வைத்துள்ள பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பூண்டு பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் அதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து புளியையும் அதில் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இறுதியாக அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி ஆறவிட வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிய விட்டு,பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கடப்பா சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |