ஐபிஎல் போட்டி மீண்டும் இந்த ஆண்டில் எப்பொழுது நடக்கும்? பிசிசிஐ-யின் முடிவு; ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில், ஐபிஎல் வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால், ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். மேலும்ம் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது.
இதனால், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி அளித்தார்.
ஐ.பி.எல். போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்தது. இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளது. இதனிடையே, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பிய நேரத்தில், பாதியில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்.
வெளிநாட்டு வீரர்கள் வருவதிலும் பிரச்சினை இருக்காது என்றார். மேலும், 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது.
ஐ.பி.எல். போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலக கோப்பை நடைபெறுவதும் சந்தேகமே. மேலும், நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே உள்ளது.
இதனால், ஐக்கிய அரபு எமிரேட்சில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.