இந்தியாவில் கருப்பு பூஞ்சையை விட ஆபத்தாக பரவும் வெள்ளை பூஞ்சை நோய்... கலக்கத்தில் மக்கள்
கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் பரவலைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், இந்தியாவின் நிலை மோசமாக இருந்து வருகின்றது.
அதிலும் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்நோய் பெருந்தொற்று நோயாக ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் போன்ற மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோயோடு போராடும் நிலையில், பீகார் தலைநகர், பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை விட வெள்ளை பூஞ்சை நோய் கொடியது என கூறப்படுகிறது. நோய் பாதித்த 4 பேரில் ஒருவர் பாட்னா நகரில் பிரபல சிகிச்சை நிபுணராகும். இந்த வெள்ளை பூஞ்சை நுரையீரல் தொற்று ஏற்பட காரணமாகிறது.
தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உடல்பாகங்களில் பெரும் பாதிப்புகளை வெள்ளை பூஞ்சை ஏற்படுத்த கூடும்.
குறித்த வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது என்று பராஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் சுவாச மருத்துவம் / நுரையீரல் மருத்துவ தலைமை மருத்துவரான அருனேஷ் குமார் கூறியுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, அல்லது சுத்தமற்ற தண்ணீரின் மூலம் பரவுவதாக கூறியுள்ள நிலையில், கொரோனா அறிகுறி போன்றே இதன் அறிகுறியும் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் வெள்ளை பூஞ்சை ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என்றுதான் வரும். ஆனாலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும், என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.