போதை தெளிய கணவரை மரத்தில் கட்டிவைத்த குடும்பத்தினர்: காலையில் சடலமாக கிடந்த சோகம்
தமிழகத்தில் மனைவி ஒருவர் போதையில் வந்த கணவரை போதை தெளிவதற்கு வேப்பமரம் ஒன்றில் கட்டிவைத்த நிலையில் மறுநாள் காலையில் அவர் உயிரிழந்துள்ளது அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடக்கு நரையன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் - கலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஜெயக்குமார் மது அருந்திவிட்டு தினமும் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல், இரவில் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் மகள்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
போதையின் உச்சத்தில் இருந்த அவரை அப்படியே விட்டால் விபரீதமாகிவிடும் என்று போதை தெளியும் வரை, அவரை மரத்தில் கட்டிவைக்க குடும்பத்தினர் முடிவு செய்து வேப்ப மரம் ஒன்றில் கட்டி வைத்துள்ளனர்.
காலையில் பார்த்தபோது அவர் எதிர்பாராதவிதமாக இறந்து சடலமாக காணப்பட்டுள்ளார். அவரின் தலையில் பலத்த காயம் இருந்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஜெயக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.