குழந்தை பிறக்கணுமா? மனித எலும்புகளை சாப்பிட்டால் போதும்.. அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் பூனே பகுதியில் குழந்தை பாக்கியமற்ற பெண் ஒருவரை மந்திர சக்தியால் குழந்தை பாக்கியம் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறி அந்தப் பெண்ணை மனித எச்சங்களை உட்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அந்தப் பெண்ணின் கணவரும் அவரது சகோதர சகோதரிகளும் இவ்வாறு பெண்ணை வற்புறுத்தி உள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக காணப்படும் அதேவேளை மூடநம்பிக்கைகளும் உச்ச அளவில் காணப்படும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியாவை நாம் அடையாளப்படுத்த முடியும்.
மனித எலும்பு துகள்களை உட்கொள்ளுமாறு இந்தப் பெண் வற்புறுத்தப்பட்டுள்ளார். குழந்தை பாக்கியம் பெற்றுக் கொள்வதற்கான வழிபாட்டு முறைகளின் ஓர் அங்கமாக இவ்வாறு குறித்த பெண் மனித எச்சங்களை உட்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மனித எலும்பு துகள்களை உட்கொள்ள பலவந்தப்படுத்திய பெண்ணின் கணவர் கணவரின் பெற்றோர் சகோதர சகோதரிகள் மற்றும் பெண் மாந்திரீகர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதான குறித்த பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட போதிலும் இதுவரையில் அவருக்கே குழந்தை பாக்கியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தியுள்ளதாகவும் அகோரிகள் பின்பற்றும் வழிமுறைகளை பின்பற்றுமாறு இந்தப் பெண் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பூனே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.