நகைகள், பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் - யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்கள் மூலம் பிரபலமான யூடியூபர் மதுமிதா வீட்டில் சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

118 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டனில் யூடியூபர் மதுமிதா, தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று குடும்பத்தினர் ஷாப்பிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைதுள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மதுமிதா, சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்னர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் உத்தரவின் பேரில், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதான் தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடன், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.கொள்ளை நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் டவர் தகவல்களையும் போலீசார் சேகரித்து, சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்த பின்னரே, இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் அது எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |