பிரியாணியின் சுவையை தோற்கடிக்கும் வெஜ் புலாவ் ரெசிபி... சுலபமாக செய்வது எப்படி?
கர்நாடகா ஸ்டைலில் வெஜ் புலாவ் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெஜ் புலாவ்
பொதுவாக வீட்டில் ஒரே மாதிரியான உணவுகளை சமைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் போரடித்துவிடும்.
தற்போது மக்களிடையே ட்ரெண்டிங் ஆகிவரும் உணவு தான் புலாவ். இதனை கர்நாடக ஸ்டைலில் அசத்தலான சுவையில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட வெஜிடபுள் பிரியாணி போன்று இருந்தாலும், இதன் சுவை சற்று வேறுபடுகின்றது. எளிய முறையில் எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
காய்கறிகள் - 1/2 கப் (1 கேரட், 5 பீன்ஸ், 1 உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி அளவு பட்டாணி)
எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
கல்பாசி - சிறிதளவு
மராட்டி மொக்கு - 1
அன்னாசிப்பூ - 1
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - (பொடியாக நறுக்கியது)
தனியா தூள் - 1 ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 6
புதினா இலை - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1/2
இலவங்கப்பட்டை - 2 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு பல் - 10

செய்முறை
அரிசியை தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். காய்கறிகளை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டு பொருட்களை மிக்ஸியில் மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அ தில் எண்ணெய், கிராம்பு, பட்டை, கல்பாசி, மாராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கி, அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தற்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, காய்கறிகளை உள்ளே சேர்த்து நன்றாக கிளறவும். காய்கறி சிறிதளது வெந்தவுடன் அதில் ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு மசாலாவையும், உப்பை சேர்த்து மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
பின்பு பிரஷர் வெளியேறியதும், மூடியை திறந்து மெதுவாக புலாவை கிளறிவிடவும். அவ்வளவு தான் சுவையான கர்நாடக ஸ்டைல் புலாவ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |