Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு
பொதுவாகவே அனைவருகும் பிடித்த அசைவ உணவுகளின் பட்டியலில் இறால் கண்டிப்பாக இருக்கும்.
இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு அசைவ உணவு.
இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது உண்டு.
அந்தவகையில் மங்களூர் பாணியில் அட்டகாசமான சுவையில் இறால் மசாலா குழம்பை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
இறால் - 600 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - 3/4 தே.கரண்டி
எலுமிச்சை - பாதி
தயிர் - 1 மேசைக்கரண்டி
வறுத்து அரைப்பதற்கு தேவையானவை
மல்லி விதைகள் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
முந்திரி - 7-8 (வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
பூண்டு - 4 பல்
புளி - சிறிய துண்டு
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்து ஆறவைத்த மசாலா பொருட்களை போட்டு, அத்துடன் ஊற வைத்த முந்திரியை நீருடன் சேர்த்து, அதோடு பூண்டு, புளி மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு கிளறி, மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
பின்னர் இறாலை மட்டும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு,அதில் உள்ள இறால் வெளியிட்ட நீரை சற்று சுண்ட வைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை பேஸ்டை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக மூடி வைத்து 2-3 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து இறாலை சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கினால் அசத்தல் சுவையில் மங்களூர் இறால் மசாலா குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |