கேரளா ஸ்டைல் மீன் மாங்காய் கறி... வெறும் 10 நிமிடம் மட்டும் போதும்
சுவையான கேரளா பாரம்பரிய மீன் மாங்காய் கறி வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதன் செய்முறை விளக்கம்.
மீன் குழம்பில் மாங்காய் சேர்த்து செய்யப்படும் கேரளா ஸ்டைல் மீன் கறி, புளிப்பு, காரம் மற்றும் தேங்காய்ப்பாலின் சுவையுடன் தனித்துவமான ருசியைத் தரக்கூடியது. மண்பானையில் மசாலாக்களை வதக்கி, பச்சை மாங்காய் மற்றும் மீன் துண்டுகளை சேர்த்து சமைப்பதால் குழம்பு மேலும் சுவையாக இருக்கும். இதனை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரை கிலோ
பச்சை மாங்காய் - 2 துண்டு
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
சீலா மீன் போன்ற பெரிய அளவில் உள்ள மீனை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவில் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மண்பானையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதன்பின்ஃ நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மசாலா கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் நறுக்கிய பச்சை மாங்காய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து, வெந்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை மீன் உடையாமல் மெதுவாக சேர்த்து வேண்டும்.
மீன் வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு, இறுதியாக கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சற்று கொதிக்கவிட்டால் அசத்தலான சுவையில் கேரளா ஸ்டைல் மாங்காய் மீன் குழம்பு தயாரா இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |