மீந்துபோன இட்லி மாவில் சுவையான ஜிலேபி, பால் பணியாரம் செய்வது எப்படி?
வீட்டில் இட்லி மாவு மீதம் ஆனால், அதில் சுவையான இனிப்பு பண்டங்களை செய்து ருசிக்கலாம். அப்படி ஒரு சூப்பரான தேங்காய் பால் பணியாரம் மற்றும் சுவைமிகுந்த ஜிலேபி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ஒரு கப் ஃபுட் கலர் – அரை ஸ்பூன் உப்பு கால் – ஸ்பூன் சர்க்கரை – அரை கப்
செய்முறை விளக்கம்
ஜிலேபி தயார் செய்ய நாம் முதலில் செய்ய வேண்டியது சர்க்கரை பாகு. அவற்றுக்கு ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பின் மீது வைத்து சூடேற்றவும்.
அடுத்து, பாத்திரம் சூடானதும் அதில் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை கைபடாமல் சிறிது நேரம் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். சர்க்கரை கெட்டியாகி பாகு வடிவத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற விடவும்.
ஓரளவு சர்க்கரைப் பாகு ஆறும் போது ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடவும். தொடர்ந்து கெட்டியான இட்லி மாவுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். நாம் தயார் செய்து வைத்துள்ள அந்த மாவை ஒரு மருதாணி கோன் வடிவில் உள்ளது பேப்பரில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு, எண்ணெயை சூடேற்றி மாவை ஜிலேபி வடிவில் எண்ணெயின் மீது பிழிந்து விடவும். ஒரு வேளை இட்லி மாவு திரிந்தால் அவற்றுடன் சிறிதளவு மைதா மாவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தேங்காய் பால் பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்
கெட்டியாக இருக்கும் இட்லி மாவு – ஒரு கப் அளவு (உப்பு போட்டு கரைக்காமல்) தேங்காய் துருவல் – ஒரு கப் அளவு சர்க்கரை, ஏலக்காய் பொடி – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஏலக்காய்களை ஒரு மிக்ஸியில் இட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து அதிலிருந்து தேங்காய் பாலை பிழிந்து தனியாக (திக்காக) எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், அந்தத் தேங்காய் பாலுக்கு உங்களுடைய சுவைக்கு ஏற்றார் போல் சர்க்கரையைச் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது, இட்லி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, இவைகளை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இட்லி மாவு கெட்டியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் விடவும்.
இப்போது அவற்றை பொன்னிறமாக சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
இப்படி நாம் சுட்டு எடுத்த இந்த போண்டாக்களை சுடசுட தயாராக வைத்திருக்கும் தேங்காய்ப் பாலில் இட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அவற்றை ருசித்து மகிழுங்கள்.....