சத்தான கொய்யாபழ பொரியல்... வெறும் 5 நிமிடம் போதும்
சத்தான பழங்களில் ஒன்றான கொய்யாபழத்தில் பொரியல் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கொய்யா பழம்
கொய்யாபழத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி என அனைத்து சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. மிகவும் விலை குறைவாக கிடைக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கின்றது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் ஜுஸ், ஐஸ்கிரீம், சாலட் என செய்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால் கொய்யாப்பழத்தில் பொரியல் செய்வது என்பது பலருக்கும் தெரியாத ஒரு உணவாகும். அந்த வகையில் கொய்யாப்பழ பொரியல் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
கொய்யாப்பழம் - 1 (அ) 2(சற்று காயாக இருக்கவும்)
காய்ந்த மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கொய்யா பழத்தினை சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதுவே பழமாக இருந்தால் நடுப்பகுதியை விட்டுவிட்டு வெளிப்பகுதியை பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக வெட்டிய பின்பு, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கவும்.

மேலும் நறுக்கி வைத்த கொய்யா, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து, இறுதியில் தேங்காய் துருவல், மல்லி இலை இவற்றினை தூவி இறக்கினால் கொய்யா பொரியல் தயார்.
இதன் சுவையை இன்னும் அதிகரிக்க கொய்யாவை குழைய விடாமல் அரை பதத்திற்கு வேக வைக்கவும். அதுமட்டுமின்றி வறுத்த வேர்கடலை பிடிக்கும் என்றால் அதனை பொடி செய்து மேலே தூவி விட்டு இறக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |