ஹீமோகுளோபின் அளவை கூட்டும் பேரிச்சம்பழம் அல்வா- ஈஸியாக செய்வது எப்படி?
பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் மாலை நேர டீக்கு ஏதாவது சுவிட்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.
அப்படி இருந்தால் சந்தேகமே இல்லாமல் கேரட் அல்வா, பருப்பு அல்வா, ரவை அல்வா என அல்வா வகைகளை செய்து சாப்பிடலாம். அந்த வரிசையில் ஒன்று தான் பேரீச்சம்பழ அல்வா.
இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது.
பேரீச்சம்பழத்தில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகின்றது.
இப்படி ஏகப்பட்ட பலன்களை பாரபட்சம் பாராமல் கொடுக்கும் பேரீச்சம்பழத்தை வைத்து எப்படி அல்வா செய்து என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பேரீச்சம்பழம் அல்வா
தேவையான பொருட்கள்:
- பால் - ½ லிட்டர்
- பேரிச்சம்பழம் - 200 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- துருவிய தேங்காய் - 2-3 டீஸ்பூன்
- நெய் - 4-5 டீஸ்பூன்
- முந்திரி - 10 முதல் 12
- பாதம் - 10-12
- திராட்சை - 10-12
- ஏலக்காய் தூள்- சிறிது
செய்முறை:
கர்ஜூர் அல்வா எனப்படும் பேரீச்சம்பழ அல்வா தயாரிப்பதற்கு முதலில் பாலில் பேரீச்சம்பழத்தை
சுமார் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
8 மணி நேரத்திற்கு பின்னர் பேரீச்சம்பழத்தை எடுத்து சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு முந்திரி, பாதாம் மற்றும் பிற உலர் பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கவும். அதில், அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுதை கொட்டி நன்றாக கலந்து விடவும். விழுது பொன்னிறமாக வரும் வரை மெதுவாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
பேரீச்சம்பழ விழுதுவுடன் சர்க்கரை, பால் இரண்டையும் கொடுக்கப்பட்ட அளவில் கலந்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கெட்டியாவது போன்று உணர்ந்தால் அடுப்பை அணைத்து விட்டு பிசைந்து அல்வா பதத்திற்கு எடுக்கவும். இறுதியாக ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து பரிமாறினால் “கர்ஜூர் அல்வா”தயார்!
கர்ஜூர் அல்வா சாப்பிடுவதால் என்ன பலன்
1. இரவில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இந்த பேரீச்சம்பழம் அல்வா நல்லது. தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவு பாலில் கலந்து கொடுத்து வந்தால் இந்த பழக்கம் நாளடைவில் இல்லாமல் போகும். அத்துடன் உடலை வெப்பமாக வைத்து கொள்ளும்.
2. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சில அடிக்கடி தொற்றுகளிடம் சிக்கிக் கொள்வார்கள். இந்த அல்வாவை தினமும் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. இதய நோய் அபாயம் உள்ளவர்கள் இந்த அல்வா சாப்பிடலாம். இதிலிருக்கும் பேரீச்சம்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-அபோப்டோடிக் பண்புகளை கொண்டது. இது உங்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கும். அத்துடன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையுள்ளவர்களுக்கு நல்ல பலனை கர்ஜூர் அல்வா கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |