சத்தான காலை உணவு வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்யனுமா?
காலை உணவிற்கு சத்தான கம்பு ரொட்டி மிகவும் சுலபமாக தயாரிப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். புதிதாக தொடங்கும் நாளில் எந்தவித சோர்வும் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு முக்கியமே காலை உணவு தான்.
அவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கம்பு ரொட்டி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப
தண்ணீர் - சிறிது
செய்முறை:
மிக்ஸி ஜார் ஒன்றில் அரைப்பதற்கு பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பாத்திரம் ஒன்றில் அரைத்த விழுதை சேர்த்து, அதில் கம்பு மற்றும் கோதுமை மாவு இவற்றினை சேர்க்கவும்.
தொடர்ந்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை, சுவைக்கு ஏற்ப உப்பு, பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த வேர்க்கடலை, தயிர் இவற்றினை சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டையாக எடுத்துக்கொண்டு, இலையில் வைத்து தட்டையாக தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு முன்னும், பின்னுமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கம்பு ரொட்டி தயார்.