நகைகளை ஒரே பெட்டியில் சேர்த்து வைத்திருக்கீறீர்களா? அந்த தவறை செய்யக்கூடாதாம்
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி அணியும் ஆபரணங்களில் ஒன்று தான் தங்கம். தங்க நகைகளை நாம் பாதுகாப்பாக வைப்பதுடன், அதனை சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே தலைமுறை தாண்டியும் புதுசு மங்காமல் இருக்கும்.
தங்க நகைகளை பயன்படுத்தும் நாம் அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதில்லை. இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தங்க நகையை எவ்வாறு சுத்தம் செய்வது?
ஆண் பெண் என அனைத்து வயதினரும் தங்களுக்கு ஏற்ப புது புது டிசைன்களில் நகையை அணிந்து வருகின்றனர். அவ்வாறு நாம் அன்றாடம் அணிந்திருக்கும் நகையை மாதம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் சிறிது ஷாம்பு போட்டு அதற்குள் நகையை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து பல்துலக்கும் பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தல் வேண்டும்.
அதே போன்று விசேஷ வீடுகளுக்கு செல்லும் போது அணியும் நகைகளாக இருந்தால், அணிந்துவிட்டு கழற்றி வைக்கும் போது பருத்தி துணிகளினால் நன்றாக துடைத்து பின்பு பெட்டியில் வைக்க வேண்டும்.
மிஷின் கட்டிங் செய்யப்பட்ட நகையையும் இவ்வாறு பருத்தி துணிகளினால் சுத்தம் செய்தால் போதுமானது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதும், மேக்கப் அதிகமாக பயன்படுத்தும் போதும், அதிகமாக வியர்க்கும் தருணங்களில் நாம் பயன்படுத்தும் நகைகள் சீக்கிரம் அழுக்கு படிந்துவிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தங்க நகைகளை வைக்கும் அளவிற்கு உங்களிடம் பெட்டி இல்லையெனில் காட்டன் துணியில் சுற்றி பட்டுப்புடவைக்கு இடையே வைத்தால் எந்த சேதாரமும் இருக்காது.
முத்து நகையை பாதுகாப்பது எப்படி?
முத்து நகைகளை பொருத்த வரை முத்துக்கள் மட்டுமே பிரதானமாக தெரியும். இதனை மற்ற உலோகத்துடன் சேர்த்து வைக்கக்கூடாது.
முத்து நகைகளை வைப்பதற்கு தனியாக பெட்டி ஒன்றினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லையெனில் முத்துக்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டு, தனித்துவத்தை இழந்துவிடும்.
அதே போன்று முத்து நகையோடு வேற எந்த நகையும் அணியக்கூடாது. எளிமையான முறையில் ஆடை உடுத்து முத்து நகை அணிந்தால் மட்டுமே எடுப்பாக இருக்கும்.
கழுத்தோடு ஒட்டி இருக்கும் முத்து நகைகளை வாங்கி அணியுங்கள். மிகவும் நீண்ட முத்து நகைகளை அணிந்தால் அது சீக்கிரம் தளர்வு அடைந்துவிடும்.
முத்து நகையை அணியும் போது முடிக்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது, ஒப்பனை செய்வதை முற்றிலுமாக தவிர்க்கவும்.
முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து விடவும், காய்ச்சி வடிக்கட்டிய தண்ணீரில் கழுவினால் மிகவும் பிரகாசமாக இருக்குமாம்.
பவள நகையை எவ்வாறு பாதுகாப்பது?
மென்மையானதாக இருக்கும் பவள நகைகளை சூரிய வெயிலில் அணிந்தால் அதன் நிறம் மாறிவிடுமாம். குளிக்கும் போது மற்றும் ஒப்பனை செய்யும் போது, எண்ணெய் தேய்கும் போது இவற்றினை அணிவதை தவிர்க்கவும்.
மென்மையான சோப்பு போட்டு கையினால் கழுவினால் போதுமானது. அதிகம் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான பிரஷ் பயன்படுத்தலாம். குளிக்கும் போது கழுவுவதை தவிர்க்கவும். பவள நகை பெரிதும் பாதிப்பு ஏற்படுமாம்.
கல் நகைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?
கற்கள் பதித்த நகைகளை தனியாக அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவதோடு, மற்ற நகைகளுடன் சேர்த்து அணிந்தால் அவை கற்களில் உராய்வை ஏற்படுத்தும்.
நுணுக்கமான வேலைப்பாடு கொண்டிருக்கும் இதனை நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமானால் பத்திரமாக பயன்படுத்த வேண்டும்.
மற்ற கல் நகைகளுடன் குறித்த நகையை வைக்கக்கூடாது.