நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தான் தண்ணீர் தேவையா?
தினமும் நமது உடம்பிற்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தண்ணீர்
மனிதர்கள் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாள் ஒன்றிற்கு 2 லிட்டர் தண்ணீர் அதாவது 8 டம்ளர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
ஆனால் 8 டம்ளர் என்பது அளவு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது நமது உடல் தினசரி இழக்கும் திரவத்தை ஈடுசெய்யும் அளவிற்கு தண்ணீர் பருகுவதே சரியான முறை என்று கூறப்படுகின்றது.
நம் உடலுக்கு குறைந்தது 1.5 லிட்டர் திரவம் அவசியம் தேவை. இவ்வாறு இருந்தால் நீரிழப்பை தவிர்க்க முடியும். இதில் சுமார் 20 சதவீதம் நாம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்திலிருந்து கிடைக்கும்.
பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை பொறுத்து இந்த அளவு மாறும். 1.5 லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவே. அவரவர் உடலமைப்பு, உடல் உழைப்பு, காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப நீர் தேவை மாறுபடும்.
நம் உடலில் இழக்கப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப நீரை எடுத்து கொள்ள வேண்டும். கடின உழைப்பு மேற்கொள்பவர்களுக்கு மட்டுமின்றி, ஓய்வு எடுப்பவர்களுக்கும் உடம்பில் நீர் இழக்கின்றது.
20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான நபர், சிறுநீர் வழியாக தினமும் 500 மி.லி.யும், சுவாசம் மற்றும் சருமம் மூலம் சுமார் 700 மி.லி.யும் நீரை இழக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது கடுமையான வெயில் அல்லது உடற்பயிற்சியின்போது அதிகரிக்கும்.
எனவே ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரை எடுத்துக் கொள்ளாமல், உடலின் தேவைக்கு ஏற்ப நீர் பருக வேண்டும்.
சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருந்தால் நீங்கள் பருகும் தண்ணீர் போதுமானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். மேலும் தாகம் எடுக்கும்போது அதற்கேற்ப தண்ணீர் அருந்துவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |