புற்றுநோயை எதிர்த்து போராடும் முருங்கை கீரை சட்னி... இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பொதுவாகவே காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக முருங்கைக்கீரை, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதுடன் ஏராளமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகவும் அறியப்படுகின்றது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமான பிரச்சனைகளை போக்குவது, இரத்த அழுத்தத்தை சீராக்குவது மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.
முருங்கைக்கீரையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
முருங்கைக்கீரை சாறு இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்ருப்பதுடன் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
முருங்கைக்கீரையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை கீரையைில் நாவூரும் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
கடலை பருப்பு - 1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு),
தேங்காய் - ½ மூடி
சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி- சிறியது (ஒரு இன்ச் அளவு)
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1தே.கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கடலைப் பருப்பு - ¼ தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - ¼ தே.கரண்டி
கருவேப்பிலை - கொத்து
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து,காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவேண்டும்.
பின்பு பாத்திரத்தில் மீதம் இருக்கும் எண்ணெயில் முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, சுத்தம் செய்து வைத்த புளி மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். பின்னர் வறுத்து வைத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விட்டு,அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி,கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முருங்கை கீரை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |