நாவூரும் சுவையில் முட்டை புளிக்குழம்பு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக திகழும், முட்டை சாப்பிடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் பிடித்த விடயம் தான். அசைவ உணவுகளை தவிர்க்கும் சிலர் கூட முட்டை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள்.
முட்டை கூந்தல் வளர்ச்சி முதல் இதய ஆரோக்கியம் வரையில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.இதில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக காணப்படுகின்றது.அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும்.

உடல் எடையைக் குறைப்போருக்கும் முட்டை சாப்பிடுவது சிறந்த தெரிவாக இருக்கும். மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும், ஞாபக திறன் அதிகரிக்கவும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முட்டையில் சற்று வித்தியாசமான பாணியில் நாவூரும் சுவையில், முட்டை புளிக்குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்
கடலை எண்ணெய் -2 தே.கரண்டி
கடுகு -1/4 தே.கரண்டி
சீரகம் -1/4 தே.கரண்டி
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் -2
நசுக்கிய பூண்டு - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் -1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி
பெருங்காயம் - 1/4 தே.கரண்டி
நறுக்கிய தக்காளி -2
உப்பு -தேவையான அளவு
புளி- சிறிதளவு
சூடான தண்ணீர் -ஒரு கப்
துருவிய தேங்காய் - அரை கப்
தண்ணீர் - தேவையான அளவு
வேகவைத்த முட்டைகள் - 4
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

செய்முறை
முதலில் ஒரு கப் வெந்நீரில் புளியை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்த்து, நன்றாக கரைத்து வடிக்கட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரை கப் துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், கடலை எண்ணெயை சூடாக்கி, கடுகு போட்டு நன்றாக பொரிந்ததும்,சீரகம், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதன் பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வரும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை ஒரு மூடி போட்டு வைத்து, குழம்பை ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து,நன்றாகக் கலந்து, பாத்திரத்தை மூடி, குழம்பை மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால், அவ்வளவுதான் சுவையான சுவையான முட்டை புளிக்குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |