AI முதலீடுகளை அதிகரிக்க கூகுள் திட்டம் - 5 நாடுகளில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!
செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் தனது முதலீடுகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்தும் நோக்கில், கூகுள் நிறுவனம் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கத் தொடங்கியுள்ளது.

எந்த பிரிவுகளுக்கு விலக்கு?
கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், நிறுவனத்தின் முக்கிய AI ஆராய்ச்சிப் பிரிவுகளான டீப் மைண்ட் (DeepMind) மற்றும் கூகுள் கிளவுட் (Google Cloud) ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக, இப்பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவே கூகுள் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் அமைந்துள்ள கூகுளின் பொறியியல் மையத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

அங்கு விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாதச் சம்பளம் வரை இழப்பீடாக வழங்கப்படுகிறது.இந்த நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |