குப்பைத் தொட்டியில் கிடந்த லாக்கர்! உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
மதுரையில் குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைத் தொட்டியில் லாக்கர்
மதுரை ஜவஹர்புரம் அருகே உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய வழக்கம்போல தூய்மை பணியாளர் ஒருவர் சென்றிருக்கிறார்.
அப்போது குப்பைத் தொட்டியினுள் ஏதோ பெரிதாக கிடப்பதை பார்த்த அவர் நெருங்கி சென்றபின்னரே அது ஒரு லாக்கர் என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு அந்த தூய்மை பணியாளர் தகவல் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே சம்பவத்தன்று அதே பகுதியில் இயங்கிவரும் அடகுக்கடை ஒன்றில் லாக்கர் காணாமல் போனதாக உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்திருந்ததை அடுத்து, குறித்த லாக்கர் அவருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நகைக்கடை உரிமையாளர்
மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் ஜவஹர்புரம் பகுதியில் அடகுக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை விடுமுறையை தொடர்ந்து மறுநாள் கடையை திறக்க சென்றுள்ளார்.
அப்பொழுது உள்ளே இருந்த லாக்கர் காணாமல் போனதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட குறித்த பெட்டியை எடுத்துச் சென்ற நபர்கள் உடைக்க முடியாத காரணத்தினால் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த லாக்கரில் 21 ரூபாய் பணமும், அரை கிலோ தங்கமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
