வாழ்வில் முன்னேற கருட பகவானின் வழிபாடு - சுவாரசிய தகவல்கள்
கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.
கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம். கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.
கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.
கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை, சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரியக்குடியில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு செய்யவது நன்று. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
அடுத்ததாக கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது.