விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : அசத்தலான அம்மிணி கார கொழுக்கட்டை!
விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும் வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள்.

அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்
உப்பு– ½ டீஸ்பூன்
நெய் – 1–2 டீஸ்பூன்
சுடுநீர் – தேவையான அளவு அரைக்க
பச்சை மிளகாய் – 3
தேங்காய் – ½ கப்
கறிவேப்பிலை – 1 கொத்து

தாளிக்க தேவையானவை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 1–2
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு
அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.
இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |