சாப்பாட்டு ராமன் வைத்தியர் கைது... கொரோனாவிற்கு மருத்து கூறியவருக்கே வந்த கொரோனா
சாப்பாட்டு ராமன் என்ற பெயரில் வலம் வந்த, பல சித்த மருத்துவ குறிப்புகளை வழங்கிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூரைச் சேர்ந்தவர் பொற்செழியன். அதிக அளவிலான உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமான இவர், ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயருடன் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.
மேலும், ஸ்ரீ அய்யப்பன் சித்தா கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் தனது டியூடிப் சேனல் வழியாக கொரோனாவுக்கு தவறான ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதுடன், தனது சித்தா கிளினிக்கில் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சித்தா கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தியதில், ஆங்கில சிகிச்சைக்கான மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததுடன் அந்த கிளினிக்குக்கு சீல் வைத்ததோடு, சாப்பாட்டு ராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பொற்செழியனை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். இதனிடையே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொரோனாவுக்கு வைத்தியம் சொன்ன வைத்தியருக்கே கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல், சின்ன சேலம் சுற்றுவட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.