இனிமேல் காரக் குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... ஒரு பருக்கை சோறு மிஞ்சாது
விதவிதமாக உணவு சமைக்க யாருக்குத்தான் பிடிக்காது. புதுப் புது வகையான உணவு வகைகள் உண்போருக்கு மட்டுமின்றி அதை சமைப்போருக்கும் உற்சாகத்தை பெற்றுக்கொடுக்கும்.
நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையான காரக் குழம்பு எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 1 கப்
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
- உளுந்து - 2 தேக்கரண்டி
- மல்லி விதை - 6 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 10
- சின்ன வெங்காயம் - தேவையான அளவு
- வெள்ளைப்பூண்டு - தேவையான அளவு
- தக்காளி - 2
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - சிறு துண்டு
- தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசியை எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். அரிசி நன்றாக பொரிந்து வந்ததும் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காயத்தை சேர்த்து இலேசாக பொரித்தெடுக்கவும்.
பின்னர் மீதமிருக்கும் எண்ணெயில் அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அது சிவந்த நிறத்தில் வரும்பொழுது அரை தேக்கரண்டி மிளகை சேர்த்து இரண்டையும் வதக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வாசம் வரும்வரைவறுத்துவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி உளுந்து சேர்த்து நல்ல மணம் வந்ததும் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் இரண்டு மேசைக்கரண்டி மல்லி விதைகள் சேர்த்து வறுத்து, வாசனை வந்ததும் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் பத்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துவிட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் ஒன்றிரண்டாக வெட்டிய சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு என இரண்டையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இவை வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி குழைவாக வேகும்வரை மூடி வைக்க வேண்டும்.
வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவுடன் வதக்கி வைத்துள்ள வெங்காம், தக்காளி, வெ.பூண்டை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் ஐந்து மேசைக்கரண்டியளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெ.பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், புளித்தண்ணீர், தண்ணீர் இவை மூன்றையும் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இந்த நேரத்தில் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதோடு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்தளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிட்டு 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்க்க வேண்டும்.
பின்னர் இதை மூடி வைத்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவிடவும். சூப்பரான காரக் குழம்பு தயார்.