நினைத்தாலே எச்சில் ஊறும் மாம்பழத்தில் குழம்பு செய்யலாம்! செய்முறை விளக்கம்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதன் வாசனையை கேட்டாலே பலருக்கும் எச்சில் ஊறிவிடும், அப்படி ருசியான மாம்பழத்தில் குழம்பு செய்து சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் (சிறியது) – 5 (தோல், கொட்டை நீக்கவும்)
மாம்பழக்கூழ் – ஒரு கப்
மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
வெல்லம் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் மாங்காய்த் துண்டுகள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி வேகவிடவும்.
நன்கு வெந்த பிறகு மாம்பழக் கூழ், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெல்லம், உப்பு சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் அரிசி மாவு கரைசல்(அரிசி மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்), தோல் நீக்கிய மாம்பழம் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூடான மாம்பழ குழம்பு தயார்.