எதிர்ப்பு சக்திக்கு மருந்து: ஊரடங்கு காலத்தில் இதை மறக்காமல் சாப்பிடுங்க... சித்த மருத்துவர் வெளியிட்ட பயனுள்ள தகவல்
இயற்கை உணவு வாயிலாக உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு முட்டை, பால் சேர்த்து கொள்ளலாம். உணவில் அதிக அளவு பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய உணவு பழக்கத்தில், தெரிந்தோ, தெரியாமலோ இவற்றை தினமும் எடுத்துக்கொள்கிறோம், என அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வித்யாதேவி தெரிவித்தார்.
'எனக்கு ஐஸ் கிரீம் வேணும்' என அடம்பிடிக்கும் சிறுவர்களையும், 'ரெண்டு வாரம் வீட்டுல தானே இருக்கப்போறேன், வாய்க்கு ருசியா எதாவது 'நான் வெஜ்' சமைக்கலாம்ல...' என ஆசையுடன் கேட்கும் இளைஞர்களையும், 'சாயங்காலம் ஆச்சு எதாவது போண்டா, வடை சுடு... என, அன்புடன் கேட்கும் பெரியவர்களை வீடுக ளில் நேற்று முதல் காண முடிந்தது.
ஏனெனில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து மீண்டும், 14 நாட்கள் முழு ஊரடங்கை சந்திக்கின்றனர் மக்கள். ஊரடங்கில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமாக இருக்க கோட்டூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வித்யாதேவி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இரண்டு வாரங்கள் வீட்டில் இருக்கப்போகிறோம் என்பதற்காக மக்கள் பலரும், உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர்.
இது கொரோனா உச்சமடைந்துள்ள சூழல் மட்டுமின்றி, கோடைவெயில்கொளுத்துகிறது.
அதனால், மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கோடை வெயிலால் பக்க விளைவுகள் ஏற்படாமல் தப்பிப்பதும் அவசியம்.
முடிந்த வரை, அனைத்து உணவுகளையும் சூடாக சாப்பிடுவதால், சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
அதேபோல், உணவுப்பொருட்களை 'பிரிட்ஜில்' வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.'பிரிட்ஜில்' வைத்து எடுத்தாலும், அவை நன்றாக கண்ணுக்கு தெரிந்தாலும், நாம் வைக்கும் உணவுப்பொருள் பழசு தான்.
இயற்கை உணவு வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் ஒரு முட்டை, பால் சேர்த்துக்கொள்ளலாம்.
உணவில் அதிக அளவு பூண்டு, மஞ்சள் துாள், மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உணவு பழக்கத்தில், தெரிந்தோ, தெரியாமலோ இவற்றை தினமும் எடுத்துக்கொள்கிறோம். கோடை காலம் என்பதால், வாரத்துக்கு இரண்டு நாள் அசைவ உணவு சாப்பிடலாம்.
ஆனால், அதிக மசால் 'அயிட்டங்கள்' சேர்க்கப்படும் அசைவ உணவு, எண்ணெய் மிகுந்த பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனால், ஜீரணக்கோளாறு தவிர்க்கப்படும்.
நோய் எதிர்ப்புத்திறனை நன்றாக அதிகரிக்க, தினமும் உணவில் பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பலவகை நொறுக்குத்தீனிக்கு பதிலாக, முளைக்கட்டிய பயிறு வகைகள், கீரைகளில் சூப் வைத்தும், காய்கறிகளில் 'சாலட்' செய்தும் சாப்பிடலாம்.முடிந்த வரை, 'ஐஸ் கிரீம், கூல்டிரிங்கஸ்' தவிர்ப்பது நல்லது. அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடுவது நல்லது.
200 மில்லி நீரில், ஐந்து கிராம் கபசுரக்குடிநீர் பொடியை கலந்து, 100 மில்லி ஆகும் வரையில் கொதிக்க வைக்க வேண்டும். மேலும், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், தினமும் இரவு உறங்கும் முன், 50 மில்லி கபசுரக்குடிநீர் குடிக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 30 மில்லி குடிக்க வேண்டும்.
கொரோனா அறிகுறிகள் இருந்தால், மூன்று வேளை குடிக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வித்யாதேவி குறிப்பிட்டுள்ளார்.