மகளால் 1200 கி.மீ சைக்கிளில் அழைத்து வரப்பட்ட தந்தையை ஞாபகம் இருக்கிறதா? திடீர் மரணத்தால் ஏற்பட்ட சோகம்
இந்தியாவில் கடந்தாண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, 1200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து ஊர் திரும்பிய பாசமகள் ஜோதிகுமாரியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த மோகன் பாஸ்வான் (47), டெல்லியில் உள்ள குர்கானில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார், இவரது மகள் ஜோதிகுமாரி.
கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சைக்கிளிலேயே ஊர் திரும்புவது என்று முடிவெடுத்த ஜோதிகுமாரி, கால் நடக்க முடியாத தன் தந்தையை சைக்கிளில் அமரவைத்து, 7 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து 1200 கிலோ மீட்டர் கடந்து சொந்த ஊரைச் சென்று அடைந்தார்.

இந்த செய்தி வெளியானதும், உலகம் முழுவதிலும் இருந்து ஜோதி குமாரிக்கு பாராட்டுகள் குவிந்தது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், ஜோதி குமாரிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் மோகன் பஸ்வான் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார், தந்தையை இழந்து நிற்கும் பாசமகள் ஜோதிகுமாரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
