கிளியின் உடலில் சிக்கிய முட்டை... உயிரை காப்பாற்ற போராடும் சிறுமி!
மேற்கு வங்கத்தின் கொன்னகரில் வசிக்கும் ஷ்யாம் லால், இரண்டு ஆண்டுகளாக 'மிது' என்ற கிளியை வளர்த்து வருகிறார்.
அவரது பேத்தி தியா, மிதுவுடன் மிகவும் பாசமாக பழகி வந்தார். மிதுவின் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனித்து வந்த தியா, சில நாட்களுக்கு முன்பு அது பேசாமல், சாப்பிடாமல் அமைதியாக இருப்பதை கவனித்தார்.

இதையடுத்து, தாத்தாவை வற்புறுத்தி மிதுவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதனையில், மிதுவின் உடலில் முட்டை சிக்கியிருப்பது தெரியவந்தது.
அதன் அளவு பெரிதாக இருந்ததால், அது இயற்கையாக வெளியே வர வாய்ப்பில்லை என்றும், உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டெல்லியில் சிகிச்சை
கொல்கத்தாவில் மருந்து மூலம் முட்டையை அகற்ற முயற்சி செய்யப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை. எனவே அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் அந்த சிகிச்சையை செய்யக்கூடிய நிபுணர் அங்கு இல்லாததால், மிதுவை டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நிலை 'எக் பைண்டிங்' (Egg Binding) எனப்படுகிறது. கால்சியம் படிவதால் முட்டை சிக்கிக்கொள்வது பறவைகளுக்கு ஆபத்தான பிரச்சனையாகும்.
இத்தகைய சூழ்நிலையில், இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. மேலும், இந்த அறுவை சிகிச்சையின் செலவு சுமார் ரூ. 1.5 லட்சம்வரை எட்டக்கூடும்.
இருப்பினும், டெல்லியில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை தேவைப்படாத வகையில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். இத்தகைய சிகிச்சை அளிக்கக்கூடிய நிபுணர்கள் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளனர்.