இலங்கையுடன் ராஜராஜ சோழ மன்னருக்கு இருந்த உறவு! ஈழக்காசுகள் கண்டெடுப்பு...
ராஜராஜசோழன் காலகட்டத்து ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசினர் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் மாணவி கு. முனீஸ்வரி முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த மூன்று ஈழ காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.
இந்த காசுகளில் ஒரு பக்கம் கையில் மலர் ஏந்தியவாறு ஒருவர் நிற்பதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றின் மேல் பிறையும் கீழே மலரும் உள்ளன.
காசுகளின் வலது பக்கத்தில் திரிசூலம் விளக்கு பொறிக்கப்பட்டுள்ளது. காசுகளின் மறுபக்கம் கையில் சங்கு ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் அமைப்பும் உள்ளது.
சங்கு ஏந்தியவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீ ராஜராஜ' என மூன்று வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த காசுகளில் உள்ளவர் இலங்கை காசுகளில் உள்ள உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது குறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். '' இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதைக் குறிக்கும் வகையில் ஈழக்காசுகள் உள்ளன.
இந்த காசுகள் முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்கலாம். கோரைக்குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று காசுகள் செம்பு உலோகத்தாலானவை. ராமநாதபுரத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன் குளம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே ஈழ காசுகள் கிடைத்துள்ளன'' என்றனர்.
குறிப்பு
- சோழர் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகின்றது.
- அரசியலில் நிலைத்தன்மை ஏற்பட்டு, கல்வி, கலை, பண்பாடு ஆகியவை தழைத்தோங்கிய நேரம் ஆகும்.
- ஆரம்பகால சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தமையால்.
- பல்லவர்களது நாணயங்களைப் பயன்படுத்தினர். முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு பிறகு நாணயங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை கிடைத்துள்ள பிற்கால சோழர் நாணயங்களில் பழமையானதாக கருதப்படுவது முதலாம் பராந்தகன் கால நாணயங்கள் தான்.