விபத்தில் சிக்கிய சிறுவன்: பிகில் படத்தினை பார்த்து சிகிச்சையில் அரங்கேறிய சம்பவம்
விபத்தில் சிக்கிய சிறுவன் ஒருவனுக்கு பிகில் படத்தினை போட்டுக் காட்டி சிகிச்சை அளித்துள்ளனர் மருத்துவர்கள்.
சென்னை மயிலாப்பூரில் பகுதியை சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன் அவரது மாமா அரவிந்துடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றுள்ளார்.
அப்பொழுது சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது காயத்திற்கு தையல் போடுவதற்கு முடிவு செய்துள்ளனர். அதனால் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கு ஊசி போட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் குறித்த சிறுவனோ பயத்தில், வலியில் துடித்தாலும் பரவாயில்லை... ஊசி மட்டும் போட விட மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளான்.
அப்போது இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர் சிறுவனின் கவனத்தை மாற்றுவதற்காக உனக்கு என்ன பிடிக்கும்? எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன், நடிகர் விஜய் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என வலியால் அழுதுகொண்டே கூறியுள்ளான்.
இதனையடுத்து ஜின்னா தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார்.
படத்தை பாக்க ஆரம்பித்த சிறுவன் தன்னை மறந்து பிகில் படத்தை பார்த்து ரசித்துள்ளான். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மருத்துவர்கள் இது தான் சரியான நேரம் என்று ஊசி போட்டு, தையல் போட்டு சிகிச்சை அளித்துவிட்டனர்.
ஊசியே வேண்டாம் என்று அடம் பிடித்த சிறுவன் தையல் போட்டபோது கூட எதிர்க்காமல் பிகில் படத்தை ஆர்வமாக பார்த்துள்ளானாம். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.