பெண்ணின் வயிற்றில் 14 பேனாக்கள், 5 கரண்டிகள், மெழுகுவர்த்தி! அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி
ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரத்தால் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 33 வயது பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அறுவை சிகிச்சை
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் மூலம் வயிற்றுக்குள் உணவு அல்லாத சில விசித்திரமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி என பல்வேறு பொருட்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
இதில் ஒரு பேனாவின் மூடி இல்லாத நிலையில் இருந்ததாகவும், அதன் கூர்மையான பகுதி வயிற்றுக்குள் குத்தியதால் அந்தப் பெண்ணுக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?
உணவு அல்லாத பொருட்களை மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத விருப்பத்தை ஏற்படுத்தும் ‘பைகா சிண்ட்ரோம்’ (Pica syndrome) எனப்படும் அரிய வகை உணவுக் கோளாறு அல்லது மனநலப் பிரச்சினை இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், அந்தப் பெண் இத்தனை பொருட்களையும் எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |