பை பை அப்பா... என சிரித்தபடி ஆற்றில் குதித்த இளம்பெண்! என்ன காரணம்?
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
உள்ளூர் திருவிழாவுக்குச் சென்றிருந்த பாயல், உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவரை சந்திக்கப் போவதாகவும் தனது தந்தை கிருஷ்ண லாலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் இல்லாததால், கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீடு திரும்பியபோது, அவரது துப்பட்டா எதிர்பாராதவிதமாக பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. வாகனத்தை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்ற நேரத்தில், பாயல் திடீரென அருகிலிருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.
“நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியபடி அவர் பாலத்தை நோக்கி ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்து சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, அவருடன் வந்த நபர் செய்வதறியாது, பாயலின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தந்தை தொலைபேசியில் மகளிடம் காரணம் குறித்து கேட்டபோது, “யாரும் எனக்கு எதுவும் செய்யவில்லை. இது என் வாழ்க்கை. என் மனம் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறது” என பாயல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை அவரை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி கூறிவிட்டு, பிரேம் நகர் அருகேயுள்ள பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் சுமார் 2 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பாயல் பாலத்தில் நிற்பதும், பொதுமக்கள் அவரைத் தடுக்க முயல்வதும், அவர் சிரித்தபடி கையசைப்பதும் உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பாயல் ஆற்றில் குதித்ததும், போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை. சிரித்தபடி பொதுமக்களிடம் கையசைத்துக்கொண்டிருந்த இளம்பெண் சில நிமிடங்களிலேயே ஆற்றில் குதித்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |