60 வயது நபரின் மூளையை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை
பீகாரைச் சேர்ந்த 60 வயது ஆன நபர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் தலைநகரம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (IGIMS) மருத்துவமனையில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜமூய் பகுதியைச் சேர்ந்த அனில் குமார் (வயது 60) என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சில நாட்களாகவே அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் IGIMS மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு மூளையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர் மனிஷ் மண்டல் என்பவர் அனில் குமாருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சையை அகற்றியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் மனிஷ் கூறுகையில், அனில் குமாருக்கு மூக்கின் வழியாக கருப்பு பூஞ்சை மூளைக்கு சென்றிருக்கிறது. நல்ல வேளையாக அவரின் கண்களுக்கு அது பரவவில்லை.
இது போல பாதிக்கப்பட்ட பலருக்கும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் கண்கள் நீக்கப்பட்டது என கூறினார்.
கருப்பு பூஞ்சை நோயானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிடையே கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.