தீபாவளி ஸ்பெஷல்: பச்சை மிளகாய் தயிர் முறுக்கு செய்து அசத்துங்க
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பச்சை மிளகாய் தயிர் முறுக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே புதிய ஆடை, பட்டாசு என்று தான் குழந்தைகளுக்கு ஞாபகம் வரும். ஆனால் பெரியவர்கள் பலகாரம் செய்வதை குறித்து தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் பலகாரங்களை வீட்டில் செய்யாமல் கடையிலேயே வாங்கி முடித்து விடுகின்றனர். ஆனால் நமது வீட்டு பெரியவர்கள் வீட்டில் மட்டுமே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

அவ்வாறு செய்யும் பலகாரங்களில் மிகவும் முக்கியமானது முறுக்கு ஆகும். முறுக்கு சாதாரணமாக செய்யாமல் சற்று வித்தியாசமாக தயிர், பச்சைமிளகாய் சேர்த்து செய்தால் சுவை இன்னும் அட்டகாசமாகவே இருக்கும்.
தற்போது பச்சை மிளகாய் தயிர் முறுக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 ½ கப் அரிசி மாவு
¼ கப் உளுந்து மாவு
¼ கப் தயிர் (புளிக்காதது)
2 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
1 ஸ்பூன் எள்
1 ஸ்பூன் நெய்
தேவையான அளவு உப்பு
பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்

செய்முறை
முதலில் மிக்ஸி ஜார் ஒன்றில் 12 பச்சை மிளகாய் தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், அரைத்து வைத்த மிளகாய் விழுது, தயிர் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இல்லாமல் மென்மையாக பிசைந்தால் முறுக்கு பிழிவதற்கு கடினமாக இருக்காது.

கடாய் ஒன்றில் பொரிப்பதற்கு எண்ணெய்யை தயாராக வைத்துக் கொண்டு, முறுக்கு அச்சில் மாவு சேர்த்து எண்ணெய்யில் நேரடியாக முறுக்கு பிழிந்துவிடவும்.
இவ்வாறு இரண்டு புறமும் முறுக்கை திருப்பி போட்டு, பொன்னிறமாகும் வரை வேக வைத்து எண்ணெய்யிலிருந்து எடுத்ததால் சுவையான பச்சை மிளகாய் தயிர் முறுக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |