மருந்து வாங்க சென்ற இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. வைரலான வீடியோவால் பணியிட மாற்றம்!
சட்டீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு கடந்த நாட்களுக்கு முன் மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த போலீசார் அவரது வாகனத்தை மடக்க, வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்திலும் அறைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, இச்சம்பவம் பெரியதாகியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “நானும், என் குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளோம். என் தாய் இன்னமும் கோவிட்டால் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் சத்தீஸ்கரில் பலரது உயிர் பறிபோயுள்ளது. அந்த கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தனது அறிக்கையில் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், அதனாலயே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும், அவர் மீது அதிவேகமாக சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்ததால் மாவட்ட ஆட்சித்தலைவர் ரன்பீர் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.