அடுத்தடுத்து திரையுலகில் ஏற்படும் இழப்பு... பழம்பெரும் இயக்குனர் கொரோனாவால் உயிரிழப்பு
பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்தி ராமன்(89) கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவின் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர்.
பாண்டு, கோமகன், மாறன், இன்று குமரகுரு உள்ளிட்ட நடிகர்களின் உயிரைப் பறித்த கொரோனா தற்போது மற்றொருவரின் நபரின் உயிரையும் பறித்துள்ளது.
மோகன் காந்தி ராமன், இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் பணியாற்றினார்.
பின்பு செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றான், மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் என்ற படங்களை இயக்கியுள்ளதோடு, கில்லாடி மாப்பிள்ளை என்ற படத்தில் பாக்கியராஜனின் தந்தையாகவும் நடித்துள்ளார்.
மேலும் பெப்சி அமைப்பின் தலைவராக சில காலம் பணியாற்றி இவர் முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார்.
சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
