மூளையை அதிவேகமாக தாக்கும் டெல்டா வைரஸ்: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
நாட்டில் கொரோனா 2வது அலை பரவ முக்கிய காரணமாக உருமாறிய டெல்டா வைரஸ் பார்க்கப்படுகிறது.
மிகவும் வேகமாக பரவக்கூடிய அந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 85 நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன் தாக்கத்தினால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் நினைத்ததை விட மோசமாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் முன்னாள் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் ராமன் கங்காகேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிக பரவும் திறன் கொண்டதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கும் வேகமாக தாவும் திறன் கொண்டது என்றும் இதனால் உடலின் ஒரு உறுப்பை தாக்கிவிட்டு, வேகமாக மற்றொரு உறுப்பையும் தாக்கும் திறன் இதற்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
செல்கள் வழியாக மூளைக்கும் இது நேராக செல்லும் திறன் கொண்டது என்ற நிலையில், இதனால் மூளை தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமன் கங்காகேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் எந்த உறுப்பை வேண்டுமானாலும் இது தாக்கலாம் என்றும் பல்வேறு உறுப்புகளை இது தாக்கி பாதிப்படைய வைக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தினால் நரம்பு ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.