மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்?
தென்னிந்திய உணவுகளில் ரசம் என்பது முக்கிய உணவாக பார்க்கப்படுகின்றது. இதை சாதத்தில் ஊற்றி சாப்பிட பயன்படுத்துவார்கள்.இதற்கு பல சவைசரக்கு பொருட்கள் பயன்படுத்தப்படும்.
சளி ஜலதோஷம் போன்ற நோய்கள் வந்தால் இந்த ரசம் நல்ல நிவாரணம் தரும்.இதன் காரணமாக ரசம் உணவு மட்டமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
பொதவாக ரசம் என்றால் அது புளிப்பாக காரசாரமாக இருக்கும் ஆனால் இந்த ரசத்திற்கு புளி சேர்க்காமல் எப்படி காரசாரமாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி பழம் – 2
- கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- நெய் – ஒரு ஸ்பூன்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- உளுந்து – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- வரமல்லி – 2 ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- வர மிளகாய் – 2
- தேங்காய்த் துருவல் – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
- தாளிக்க தேவையான பொருட்கள்
- நெய் – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- வர மிளகாய் – 2 (கிள்ளி சேர்க்கவேண்டும்)
செய்முறை
முதலில் ரசம் செய்வதற்கு தக்காளி பழங்களை நறுக்கிக்கொள்ளவேண்டும். இதன் பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தக்காளி பழங்களுடன் சேர்த்து இதை நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
கொதிக்கவிட்ட இந்த ரசத்தில் தக்காளி வெந்தவுடன் அந்த தக்காளி பழங்களை அந்த தண்ணீரில் அப்படியே மசித்து வைத்துக்கொள்ளவேண்டும். இன்னுமொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு, வரமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இதை அனைத்தையும் சேர்த்து சீரகம், தேங்காய்த் துருவல், வரமிளகாய் சேர்த்து கலந்து இறக்கி, ஆறவைத்து இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இந்த மசாலாவை ஏற்கனவே மசித்த தக்காளி கலவையில் சேர்த்து, உப்பு மேலும் தண்ணீர் ஊற்றி நன்றாக நுரை கட்டி வரும்வரை கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் ஒரு கொதி வந்தவுடன் மல்லித்தழையை சேர்க்கவேண்டும். இறுதியாக தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து ரசத்தில் சேர்க்க வேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான புளி இல்லாத ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |