காலை உணவிற்கு மொறுமொறுப்பான சோள மா தோசை - பத்து நிமிடத்தில் எப்படி செய்வது?
தோசை என்றாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும்.
நீங்கள் உளுந்து மற்றும் அரிசியில் செய்யப்பட்ட தோசைகளை ஏராளமாகச் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் மொறுமொறுப்பான சோளமாவு தோசையை சாப்பிட்டு இருக்கீங்களா?.

இந்த சோள மாவு தோசையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலை நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்திருக்கும்.
பாரம்பரிய தோசை செய்வதற்கு அரிசி மற்றும் பருப்பை ஊறவைத்து புளிக்க வைக்கும் சிரமம் இருக்கும். ஆனால் சோள மாவு தோசை வெறும் 10-15 நிமிடங்களில் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்
மாவுக்கு
- சோள மாவு – 1 கப்
- கோதுமை மாவு – ¼ கப்
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவைக்கு
மசாலாவுக்கு
- உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்து கொள்ளவும்)
- பச்சை பட்டாணி – ¼ கப்
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – சிறிது (நறுக்கியது)
- கடுகு – ½ tsp
- சீரகம் – ½ tsp
- மஞ்சள் தூள் – ¼ tsp
- எண்ணெய் – 2 tbsp
- உப்பு – தேவைக்கு
- கொத்தமல்லி இலை – சிறிது
செய்முறை
உருளைக்கிழங்கு மசாலா தோசை செய்ய முதலில் சோள மாவு 1 கப் மற்றும் கோதுமை மாவு ¼ கப் எடுத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மெல்லிய தோசை மாவு போல நன்றாக கலக்க வேண்டும்.
இதில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விடுவது சிறந்தது. மசாலாவுக்கு உருளைக்கிழங்கு 3 எடுத்து வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் சீரகம் தாளித்து, அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, இறுதியாக மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி மசாலாவை தயார் செய்ய வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி தயாரித்த மாவை ஊற்றி மெல்ல பரப்பி, சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வேகவைக்க வேண்டும். அதன் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மடித்து, சூடாக பரிமாறலாம்.