சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் நண்டு ரசம்! தெருவே மணக்க வேண்டுமா?
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது.
பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள்.
மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம்.
தற்போது சளி, தலைபாரம், இருமல் இவற்றிற்கு தீர்வு கொடுக்கும் நண்டு ரசம் எவ்வாறு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நண்டு ரசம் வைப்பது எப்படி?
தலா ஒரு டீஸ்பூன் சீரகம், மிளகு, சோம்பு, 3 காய்ந்த மிளகாய், 3 டீஸ்பூன் தனியா, 4 பல் பூண்டு, 2 சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை இரும்புச்சட்டியில் தனித்தனியாக வறுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தால் ரசப்பொடி ரெடி.
ஒரு கிலோ நண்டை சுத்தம் செய்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடிகனமான மற்றொரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். இத்துடன் ஒரு டீஸ்பூன் கடுகு, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் டீஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 2 வெங்காய வடகம் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு 3 தக்காளியை அரைத்து சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு கால் கப் புளிக்கரைசல், வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
உப்பு, காரம், புளிப்பு சரிபார்த்து தீயை மிதமாக்கவும்.
ரசம் நுரைகூடி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம். சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும்.