இரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்? மருத்துவ அதிகாரிகள் விளக்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட நிலையில், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளனர்.
அவர்கள் 2ஆவது டோஸ் போட்டுக் கொள்ள கடந்த 14ஆம் தேதி சென்ற போது கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளனர். இது குறித்து தெரியவந்ததும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாற்றி மாற்றி தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிகுந்த பயத்தில் உள்ளதாகவும், இதனால் என்ன பக்கவிளைவு ஏற்படும் போகிறது என்ற அச்சம் நிலவுவதாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரியிடம் கேட்டபோது, இது முழுக்க முழுக்க கவனக்குறைவால் நடந்துள்ளது என்றார். கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணை நடைபெற்றுவருவதாக கூறினார்.
இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று கேள்வி எழுந்த நிலையில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் போட்டதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என தெரிவித்தார். ஆனால் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் தடுப்பூசிகளை இப்படி மாற்றி செலுத்துவதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்று ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.