நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா?
“ஜகஜால கில்லாடி” திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன் குடும்பத்தினர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி- அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் நடிகர் விஷ்ணு விஷால்- நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோரை வைத்து “ஜகஜால கில்லாடி” என்ற படத்தை தயாரித்தனர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக நிர்பந்திக்கப்பட்டது.
மாறாக கடன் தொகை சரியான நேரத்திற்கு செலுத்தாமல் இருந்த விவாகரம் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
நீதிபதியின் அதிரடி நடவடிக்கை
குறித்த வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதி ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க வேண்டும் என்றும் ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி கூறப்பட்ட உத்தரவிற்கமைய, உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்தியஸ்தர் தீர்ப்பை அமுல்படுத்தும் வகையில் ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
வீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு
குறித்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்டனர். ஆனாலும் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.
அடுத்த வழக்கு எதிர்வரும் மார்ச் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
