உடல்களை உறவினர்களே நதியில் வீசும் அவலம்... கொரோனா தாண்டவத்தில் அதிர்ச்சி காட்சி
கங்கை நதியில் கொரோனா சடலங்கள் மிதந்து வந்து சில வாரங்கள் கூட முடியாத நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களின் நிலை மோசமாக உள்ளது.
குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாக இருப்பதால், உடல்கள் எரியூட்டப்படாமல் வரிசையில் காணப்பட்டதை நாம் அவதானித்து வருகிறோம்.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதந்து வந்த காட்சி ஒட்டுமொத்த உலலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் கங்கை நதியில் சடலங்களை தூக்கி வீசப்படுவதில்லை என்பதை உறுதி செய்யக் கரையோர பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளி ஒருவரின் சடலம் ஆற்றில் வீசப்பட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் கடந்த மே 28ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அதில் பிபிஇ கிட் அணிந்த ஒருவரும். சாதாரண உடையில் ஒருவரும் உயிரிழந்தவரின் உடலை நதியில் தூக்கி வீசுகின்றனர். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகியுள்ளது.
அந்த நபர் கொரோனாவால் உயிரிழந்தார் என்றும் அவரது உறவினர்களே சடலத்தை நதியில் தூக்கி வீசினர் என்றும் பால்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "அந்த நபர் மே 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 29இல் உயிரிழந்தார்.
இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தான் சடலத்தை நதியில் தூக்கி வீசியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.